கனவு காணும வாழ்க்கை எல்லாம்...
நாம் காணும் பகல் கனவு நம் உள்மனதுக்கு(sub-consious mind) சென்று விட்டால் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அதை நோக்கியே இருக்குமாம்.நாம் ஆசைப் பட்டது(கனவு கண்டது) நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
என் கனவுகள் இருவகைதான்.ஒன்று நான் இந்த நாட்டுக்கு சர்வாதிகாரியானால் செய்ய வேண்டிய உடனடி கடமைகள் என்ன என்பது பற்றி.இது மிக சுவாரசியமாக இருக்கும்.தருமி இதுபோல் ஒரு பதிவு போட்டிருந்தார்.இது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
இன்னொருவகை கனவு என்னுடைய "பண்ணை இல்லம்" பற்றியது.எப்படி எனக்கு இந்த பண்ணை இல்லம் கிடைக்கிறது என்பதைப் பற்றி நான் மிகவும் குழம்புவதில்லை. அது தனி கனவு ட்ராக்.ஆனால் பண்ணை இல்லம் கனவைப்பற்றி மட்டும் விலாவாரியாக சொல்கிறேன்.
கேரளா மாதிரி ஒரு இடம்.மலைபிரதேசம் அல்ல. சமவெளிதான். ஆனால் என் பண்ணை இல்லம் ஒரு ஆற்றங்கரையோரம் உள்ளது.சலசலவென்று மெதுவாக செல்லும் ஆற்று நீர். சுற்றி அழகான வேலி அமைத்திருக்கிறேன். ஒரு பக்கம் வேலி இல்லை.அழகான ஆறு இருப்பதால் அந்தப்பக்கம் திறந்தவெளிதான்.
எல்லாவித பழ மரங்களும் உண்டு. மா, பலா, வாழை, கொய்யா, சாத்துக்குடி என்ற பழ வகைகளும் பூச்செடிகளும் பசும்புற்களுமாக ஒரு புறம். ஆடு,மாடு, நாய்,கோழி ஆகியவையும் இதே பண்ணையில் இருக்கின்றன.எந்த நேரமும் இரண்டு ஆட்டு குட்டிகளாவது அல்லது இரண்டு நாய்குட்டிகளாவது கொஞ்சுவதற்கு இருந்துகொண்டே இருக்கின்றன.
என் வீடு அந்த பண்ணை நடுவில் ஒரு சிறிய குடிசை.கூரை வேய்ந்த அந்த குடிசையில் உள்பக்கம் நடுவில் திறந்தவெளி.மழை பெய்தால் உள்ளிருந்தே மழையை ரசிக்கலாம்.அங்கே மின்விசிறி, ஏஸி முதலியன இல்லை.ஆனால் கம்ப்யூட்டர்,டிவி உண்டு.ஒரு சிறிய படிப்பறை.
எப்போதும் படிப்பதற்கு என்னிடம் ஐம்பது புத்தகங்களாவது இருந்துகொண்டே இருக்கிறது. தமிழ் இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள் என்று பல நூல்கள் உள்ளன.
எனக்கு தேவையான காய்கறிகளை என் பண்ணை இல்லத்தில் நானே பயிரிட்டுக் கொள்கிறேன். பால் தயிர் வகைகள் எல்லாம் என் பண்ணை விலங்குகளிடம் இருந்து நானே பெற்றுக் கொள்கிறேன்.
பண்ணையின் ஒரு புறம் உலகத்தரத்தில் ஒரு அமைக்கப்பட்ட ஒரு டென்னிஸ் மைதானம் அமைத்திருக்கிறேன்.அதில் காலை நேரம் நான் விளையாடுகிறேன்.அந்த பகுதி இளைஞர் களுக்கு பயிற்சியளிக்கிறேன்.ஒரு சிறிய கிராமப்புற பாணி உடற்பயிற்சி மையமும் உண்டு.மாலை நேரம் அந்த பகுதி குழந்தைகள் எல்லாம் என் பண்ணை இல்லத்திற்கு வருகின்றன. விளையாடு கின்றன.படிக்கும் குழந்தைகளுக்கு என்னாலான பாடத்தை நான் சொல்லித்தருகிறேன்.
இந்த பண்ணை இல்லத்தில் அமர்ந்துகொண்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தருகிறேன்.( திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி தலைவர் திரு.தமிழினி முத்து அவர்கள் அவருடைய பண்ணை இல்லத்தில் வைத்து தந்த பேட்டியில் தான் வருங்கால முதல்வர் மட்டும் அல்ல,தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரும் கூட என்றார். பேட்டியின் போது துணைத்தலைவர் "அஞசாநெஞ்சன்" பொட்டீக்கடையும், பொதுச்செயலாளர் "இனமான பேராசிரியர்" தருமியும்,துணை பொதுச்செயலாளர் "வியட்நாம் வென்றான்" ஜோவும் உடன் இருந்தனர்)
சரி.சரி.நிறுத்திக்கொள்வோம்.ஆனால் எனக்கு இந்த கடைசி பத்தி நீங்கலாக மற்ற விஷயங்களுடன் ஒரு கனவு வாழ்க்கை கிடைத்தால் அமெரிக்க ஜனாதிபதி பதவியே ஆனாலும் சரி, ரிலையன்ஸ் குழும தலைவர் பதவியே ஆனாலும் சரி, வேண்டாம் என்றுதான் கூறுவேன்.
(அவரவர் கனவு வாழ்க்கைப்பற்றி பின்னூட்டத்தில் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்)
No comments:
Post a Comment